மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
59-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைகளில் பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் பேசும்போது,தலைமை நீதிபதி மீதான இந்த தாக்குதல் இந்திய நீதித்துறையை அசைத்துப் பார்க்க எண்ணும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் சனாதானத்தின் குரல். மத அடிப்படைவாதம் எந்த விதத்தில் தாக்குதல் வந்தாலும் அதை ஏற்க இயலாது. அது இந்த தேசத்தை பிளவுபடுத்தும். சனாதனம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது மக்களை பிளவுபடுத்தும் என கூறினர்.
சட்டத்தின் மீதான தாக்குதலை அனுமதியோம். தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். சமத்துவத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். நீதியின் மாண்பை காப்போம், சட்டத்தைக் காப்போம் என வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர். மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.