சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக தர்ம சங்கடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் இந்நாள் தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.
தற்போதைய தலைமைச் செயலர் முருகானந்தம் தரப்பில், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்த குழு கூடி, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோருவோரின் பட்டியலை மாநில அளவில் பராமரிப்பது என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தரப்பில், இது சம்பந்தமாக அரசுப் பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுக்களையும் தாக்கல் செய்திருந்தார்கள்.
இதை ஏற்றுக்கொண்டு, தற்போதைய தலைமைச் செயலாளர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தலைமைச் செயலாளர்கள் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றும், மாறாக தர்ம சங்கடமான நிலையிலேயே இருப்பதாகவும் நீதிபதி பட்டு தேவானந்த் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பிறப்பித்த முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அதை மீறி இருப்பது துரதிஷ்டவசமானது என நீதிபதி சுட்டி காட்டினார்.
பின்னர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதன் நகலை 3 வாரங்களில் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பார்வைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.