சென்னை: தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் பிடிபட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது தொடர்பாக, சென்னை போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி கோட்டை போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தலைமைச் செயலகம் சென்று அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். முடிவில் சந்தேகப்படும்படி எந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
இதேபோல், கிண்டி போலீஸாரும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் விரைந்து ஆளுநர் மாளிகை முழுவதும் சோதித்தனர். அங்கேயும் வெடிபொருட்கள் கைப்பற்றப்படவில்லை. எனவே, 2 இடங்களிலும் புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கோட்டை மற்றும் கிண்டி போலீஸார் ஒருங்கிணைந்து விசாரணையை முன்னெடுத்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (36) என்பது தெரிய வந்தது.
உடனடியாக, அங்கு விரைந்த போலீஸார் மிரட்டல் விடுத்த தேவேந்திரனை பிடித்து விசாரித்தனர்.
அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோரைச் சந்தித்து தேவேந்திரனின் நடவடிக்கையைக் கண்காணிக்கும்படியும், இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரித்துவிட்டு சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.