தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். வனப்பகுதி சாலையில் விபத்து அபாயம் நிலவுவதால் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வழியாக நாகாவதி அணை பகுதிக்கு அரசு நகரப் பேருந்து இன்று(ஜூன் 13-ம் தேதி) காலை சென்று கொண்டிருந்தது. அணைக்கு சற்று முன்னதாக சென்றபோது, எதிரில் சின்னம்பள்ளியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி தனியார் கல்லூரி பேருந்து , மாணவியருடன் வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக இவ்விரு பேருந்துகளும் சாலை வளைவு ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த 14 மாணவியர் காயமடைந்தனர். அதேபோல, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 4 பயணிகள் காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தருமபுரி எம். பி. மணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து பெரும்பாலை போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ‘நல்லம்பள்ளியில் இருந்து நாகாவதி அணைக்கு செல்லும்போது ஏலகிரி கிராமம் தொடங்கி நாகாவதி அணை வரையிலான சாலையின் பெரும்பகுதி வனத்தின் நடுவே அமைந்துள்ளது. மேலும், ஒரு பேருந்து மட்டுமே சிரமமின்றி பயணிக்கும் வகையில் சாலையின் அகலமும் குறுகலாக உள்ளது.
இந்த சாலையை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் தினமும் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சாலையில் எந்நேரமும் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், அகலம் குறுகலான இந்த சாலையால் இப்பகுதியில் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நடந்து வந்தது. தற்போது பெரிய விபத்து நடந்துள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சாலையால் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபரீதம் நிகழவும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக குறிப்பிட்ட இந்த பகுதி சாலையை சற்றே விரிவாக்கம் செய்து விபத்தில்லா போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும்’ என்று நாகாவதி, எர்ரப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.