சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் தினமும் தரவு உள்ளீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் வாயிலாக, ஒப்பந்த முறையில் தரவு உள்ளீட்டாளர்களை (டேட்டா எண்ட் ஆப்ரேட்டர்கள்) நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியாளர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.20,310 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மாவட்ட ஆட்சியரகம் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியது. இதுகுறித்து, மின்வாரிய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஊதியத்தை உயர்த்தி வழங்க மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தரவு உள்ளீட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.718 ஆக உயர்த்தவும், இது மாதத்துக்கு ரூ.21,540க்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களின் வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.21,540 என்ற அடிப்படையில் பணியாளர்கள் பணி நாட்களை கணக்கீடு செய்து வாரியத்திடம் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.