சென்னை: “தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் அப்துல்லா ஆகியோர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அதேநேரம், புதிய எம்.பி.க்களாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் பி.வில்சன் ஆகியோர் பதவியேற்றுள்ளன.
மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்ற பின் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்’ என்றும், ‘இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப் பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்’ என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
இந்தத் தருணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் ஆருயிர் நண்பர் ஸ்டாலின் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப விருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.