சென்னை: பெப்சி, கோக் முதலான அமெரிக்க உணவு பொருட்களை ஹோட்டல்களில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. எனவே, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி பெப்சி, கோக், கே.எஃப்.சி போன்ற அமெரிக்க உணவு பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெகு விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அமெரிக்க பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறக்கப்படும்.
அதேபோல் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமோட்டா போன்றவை அதிகளவில் கமிஷன் வசூலிக்கின்றன. மக்களிடம் உணவு பொருட்களை கொண்டு செல்வதற்காக விலையை உயர்த்துகின்றன. எனவே அவற்றையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ‘சாரோ’ என்ற செயலியை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். ஸ்விகி, சொமோட்டாவில் பணிபுரிபவர்களுக்கு ‘சாரோ’வில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக்கும் மிக அதிகபட்ச வரி ஆகும். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள், ஆபரணங்கள், ரசாயனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.