மதுரை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை வலுப்படுத்த 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை எழுமலை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “என் கணவர் 2022-ல் உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் பரம்பரை சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டன. விசாரித்தபோது, தில்லையம்பல நடராஜன் என்பவர் அதிகாரிகளுடன் சேர்ந்து எங்கள் பரம்பரை சொத்துகளை மோசடியாக பட்டா மாறுதல் செய்தது தெரியவந்தது. இதை சரி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளை சந்தித்தபோது ரூ.2 லட்சம் கேட்டனர். பல தவணைகளில் ரூ.2 லட்சம் வழங்கினேன்.
கடைசியாக, அதிகாரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மனைவிக்கு ஜீ-பே மூலம் ரூ.45 ஆயிரம் அனுப்பினேன். அதன்பிறகும் கூடுதல் பணம் கேட்டதால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன். அந்தப் புகாரின்பேரில், பேரையூர் வட்டாட்சியர், எழுமலை சார்-பதிவாளர், அதிகாரிப் பட்டி வருவாய் ஆய்வாளர், அதிகாரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் வாதிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முன் அனுமதி பெற வேண்டும். அதற்காக புகார் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பப்பட்டது. மேலும், மனுதாரரின் புகாரில் வங்கி பரிவர்த்தனை மற்றும் துணை ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றமாகும். இது தொடர்பாக புகார் வந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகார்தாரர் ஆதாரங்களையும், துணை ஆவணங்களையும் அளிக்கவில்லை. இதனால், புகாரை ஆட்சியருக்கு அனுப்பினோம் என லஞ்ச ஒழிப்புத் துறை கூறுவது நியாயமல்ல. புகார்தாரரை அழைத்து விசாரித்திருந்தால், கூடுதல் ஆவணங்களை வழங்கியிருப்பார்.
மேலும், புகாரில் ஜீ-பே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறியுள்ளார். அதைப் பின்பற்றி விசாரணை நடத்தியிருந்தால் உண்மை தெரிய வந்திருக் கும். இதை செய்யாமல் இயந்திரத்தனமாக புகாரை ஆட்சியருக்கு அனுப்பியது சரியல்ல. இது கைதுக்குரிய குற்றமாகும். இதனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கம் ஏற்கக்கூடியது அல்ல.
தபால் துறையை போல் செயல்படுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கப்படவில்லை. ஆவணங்களை இணைக்கவில்லை என்பதற்காக, ஒரு புகாரை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. உண்மையை கண்டுபிடிக்க ஆதாரங்களை சேகரிக்கவும், சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும். இத்துறைக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 611. தற்போது 541 பேர் மட்டுமே உள்ளனர். மாநிலத்தில் 16.93 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை விசாரிக்க தற்போதுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது விருப்ப கொள்கை அல்ல, அது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாய கடமையாகும். இந்த வழக்கில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாக்கள் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு அவரை மட்டும் பலிகடா ஆக்க முடியாது.
விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மோசடியில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.