தூத்துக்குடி: தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை. அதைப் பாதுகாப்பதில் முதல்வர் அக்கறை காட்டவில்லை. முதல்வரின் கவனம் முழுவதும், பாஜக-அதிமுக கூட்டணியை குறை சொல்வதில்தான் உள்ளது.
மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. திருநெல்வேலி மாநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதையெல்லாம் முதல்வர் கவனிக்காமல், தேர்தல் கூட்டணி பற்றியே பேசி வருகிறார். அவருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது.
சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தன. அனைத்தையும் பரிசீலனை செய்துவிட்டு, தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய தற்போது முடிவெடுத்துள்ளது. பொதுக் கூட்டங்களிலும், சட்டப்பேரவையிலும் ஆளுநர் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தற்போது ஆளுநருடன் அதிகாரப் போட்டி இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
எம்எல்ஏக்கள் அனைவரும் தொகுதிக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியதற்கு, கடந்த 4 ஆண்டுகளாக யாரும் வேலை பார்க்கவில்லை என்றுதானே அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.