ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பழனிசாமி, ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று பேசியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய அரசிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் பேசி, உரிய தீர்வுகாண முயற்சிப்பேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் இருமுறை பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ரூ.14,400 கோடியில் காவேரி-குண்டாறு திட்டத்தை மேற்கொண்டோம்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது மேட்டூர் அணை நிரம்பி 1.25 லட்சம் கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. காவிரி-குண்டாறு திட்டம் இருந்திருந்தால், கடலில் உபரியாக கலக்கும் தண்ணீரால் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் நிரம்பி இருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காவிரி-குண்டாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
அதேபோல, அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. திமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கின. திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூடும் நிலையில் உள்ளன.
நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் அவற்றுக்குத் தீர்வுகாணப்படும். 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, கச்சத்தீவை மீட்க அழுத்தம் கொடுக்கவில்லை. கச்சத்தீவை மீட்க அதிமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரண்மனையைப் பார்வையிட்ட பழனிசாமி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது தாயார் லட்சுமி நாச்சியாரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், மூலிகை ஓவியங்கள், தொல்லியல் பொருட்களைப் பார்வையிட்டார்.