முதன்முறையாக தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகின்றனர் என மதுரை திருமங்கலத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தெரிவித்தார்.
திருமங்கலத்தில் இன்று அமமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாத் துரை தலைமையில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லாததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முதல் விவசாயிகள் வரை தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் தினமும் நடந்து வருகிறது. இன்றுகூட காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கொல்லப்படுகின்றனர். சட்ட விரோத செயல்களை தடுக்கும் அரசு அதிகாரிகளும் தாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் அடைந்த பிறகு இப்படி ஒரு மோசமான ஆட்சி நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த விடியா ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிதான் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தக் கூடிய கூட்டணி.
மக்களை திமுகவிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களது கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. முதன் முறையாக தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகி்ன்றனர். ஒரு குடும்பத்தின் பிடியிலுள்ள திமுக ஆட்சியில் மக்கள் தத்தளித்து கொண்டிருக் கின்றனர். ஆட்சி அதிகாரம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்போதுதான் ஊழல் முறைகேடு இல்லாமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் விரும்புகின்றனர். எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உறுதியாக மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.