சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும், 234 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவில் தற்போது உட்கட்சி பூசல் முற்றி வருவதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, ”கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம்” என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியதாகவும் தகவல் வெளியானது. மேலும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையேயான வார் ரூம் பிரச்சினையும் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அண்ணாமலை தவிர்த்து வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பாஜக உட்கட்சி பிரச்சினைகள் மேலும் வெடித்து, தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிட கூடாது என்பதற்காக, டெல்லியில் அவசர அவசரமாக உயர்மட்ட குழு கூட்டத்தை தேசிய தலைமை கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், செப்.3-ம் தேதி டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடனான கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, பாஜக தேர்தல் பணிக்குழு, தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சட்டப்பேரவை தொகுதிகள், மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க இருக்கின்றனர். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்கள், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் ஆராயப்படுகிறது.
மிக முக்கியமாக, தமிழக பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசல்கள், நிர்மலா சீதாராமன், அண்ணாமலை இடையேயான மோதலுக்கும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வார் ரூம் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல், பாஜக தேசிய தலைவர் தேர்தலில், பாஜகவின் தேசிய தலைமை முழு கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது திடீரென உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டியிருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.