சென்னை: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா சென்னையில் நடைபெற்றது. பல்வேறு ஆதீன கர்த்தர்கள் பங்கேற்றனர். சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்சார்பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடந்து வருகிறது.
2-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடைபெற்றது. தொடர்ந்து, தருமை ஆதீன புலவர் சி.அருணைவடி வேல் எழுதிய ‘தென்றமிழ் பயன்’ நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை தருமபுரம் ஆதீனம் வெளியிட, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் தலைமையேற்று அருளாசி வழங்கி பேசியதாவது: சேக்கிழார் நமக்கு கொடுத்த பெரிய கொடை, பண்பாட்டு பெட்டகம் பெரியபுராணம். நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தனித்தனி தொண்டுகளை செய்துள்ளனர். தொண்டுக்கு தடங்கலோ, இடையூறோ வரும் சூழலில், உயிரை மாய்த்துக் கொள்வார்களே தவிர, பின்வாங்கியது இல்லை. அதனால்தான் பெரியவர்களாக உயர்ந் தனர். அந்த புராணமும் ‘பெரிய புராணம்’ என பெயர் பெற்றது.
பட்டிதொட்டிதோறும் சென்று நாயன்மார்களின் வரலாற்றை காலத்தோடு தொகுத்து ஒரு நூலை
கொடுக்கும் சீரிய பணியை சேக்கிழார் பெருமான் செய்துள்ளார். பெரியபுராணம் இல்லாவிட்டால், தமிழகத்தின் பண்பாடு இன்று உலக அளவில் தெரிந்திருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
தணிகைமணி ராவ்பகதூர் வ.சு.செங்கல்வராயரின் ‘சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள் – 15 நூல்களின்’ ஆய்வரங்கமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் மடத்தின் 103-வது ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சேக்கிழார் ஆராய்ச்சிமைய தலைவர் நீதிபதி எஸ். ஜெகதீசன், செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, தமிழ் தொல்லியல் அறிஞர் சித்ரா கணபதி, தருமை ஆதீன புலவர்கள் அருணை பாலறாவாயன், தெ.முருகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.