சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளில் தொழில் துறையில் தமிழகத்தை உயர்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அறியாமையில் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுகிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தைத் முதல்வர் தொடங்குவதற்கு முன்பே முந்தைய பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் முதலீடாக மாறியவை குறித்து விளக்கினார். முதல்வர் இதற்கு முன் பயணித்த ஐக்கிய அரபு நாடுகளில் 6 ஒப்பந்தங்கள் ரூ.6,100 கோடி முதலீடு, சிங்கப்பூர் 1 ஒப்பந்தம் ரூ.312 கோடி, ஜப்பான் 7 ஒப்பந்தங்கள் ரூ.1,030 கோடி, ஸ்பெயின் 3 ஒப்பந்தங்கள் ரூ.3,440 கோடி, அமெரிக்கா 19 ஒப்பந்தங்கள் ரூ.7,616 கோடி என 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன.
11 நிறுவனங்களின் நில எடுப்பு, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நீங்கள் 27 ஒப்பந்தங்கள் போட்டீர்கள்.
இதன்மூலம் ரூ.5,087 கோடி முதலீடு கிடைக்குமென்றும் 24,720 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொன்னீர்கள். ஆனால், அதில் 25 சதவீத முதலீடு கூட வரவில்லை. தமிழகத்தில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியத் தலைமையகம் டெல்லி, மும்பை நகரங்களில் இருந்தால் அந்த மாநிலங்களுக்குரியதாக தரவுகள் காட்டும்.
ஆனால், ஒப்பந்தம் செய்த தமிழகத்துக்குத்தான் அந்த முதலீடு வந்தடைந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி குறித்து புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.