சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் அமலுக்கு வந்த சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருக்கிறார்.
இதனால் திருப்பூர் உட்பட தமிழகமே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில் சுங்க கட்டண உயர்வு என்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சுங்கக்கட்டணம் உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக விளங்கும். கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு வந்தபோதே கடும் கண்டனத்தை, எதிர்ப்பை தெரிவித்தோம். எனவே அமலுக்கு வந்துள்ள அபரிமிதமான சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளியமக்களின் மீதான பொருளாதாரச்சுமையை மேலும் அதிகரிக்கும். ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழலும் உள்ளது. எனவே அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
வி.கே.சசிகலா: தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, ஆவின் பொருட்களின் விலையேற்றம், வரலாறு காணாத வகையில் மின்கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்களின் விலை உயர்வுகளால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டண உயர்வு அனைவருக்கும் கூடுதல் சுமையளிப்பதாக அமையும். எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.