சென்னை: ராகுல்காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மும்மத பிரார்த்தனை செய்தும் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் ஏற்பாட்டில், மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு ராகுல்காந்தி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தார்.
மேலும், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும், சென்னை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த இலவச செவிபுலன் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், காங்கிரஸ் மாநில விளையாட்டுப் பிரிவு சார்பில் ரத்ததான முகாம் ஆகியவற்றை செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்து, ஏழை, எளியோருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், வழக்கறிஞர் கீ.சு.குமார் உருவாக்கிய ‘அவர் பெயர் ராகுல்காந்தி’ எனும் ஆவணப்படத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, ‘சமூகநீதிக்கான ஒரே தீர்வு நாடு தழுவிய சாதிவாரி கணக்கெப்பு என ஓங்கி குரல் கொடுக்கும் ராகுல்காந்தி’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், உ.பலராமன், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழக மக்கள் மற்றும் தமிழ் பண்பாடு மீது தொடர்ந்து படை எடுப்பை பாஜக நடத்தி வருகிறது. தமிழக வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனர். கீழடி ஆய்வறிக்கையை மாற்ற முயற்சித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் சொன்னது போன்று, திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான, உறுதியான கூட்டணியாக உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 11 ஆண்டுகளாக அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘எனது கருத்தியல் உடன்பிறப்பான ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இது ரத்த பந்தத்தால் அல்ல. சிந்தனை, தொலைநோக்கு நோக்கங்களால் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக நின்று துணிவுடன் வழிநடத்த வேண்டும். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றி நமதே” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
இதற்கு ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் நட்பும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையும் எனக்கு மிகவும் முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.