திருப்பூர்: ‘உணவளிக்கும் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கலாமா?’ என கேள்வி எழுப்பி, சிபில் ரிப்போர்ட் விவகாரத்தை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும், சிபில் ரிப்போர்ட் ஸ்கோர் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 15) ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோகுல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் பேசியது: ”தமிழக அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின அடிப்படையில் பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் கடந்த 2001-ம் ஆண்டுக்குக்கு பிறகு 3 ஆண்டுகளைத் தவிர விவசாயிகள் லாபம் பெற முடியவில்லை.
ஏற்கெனவே விவசாயிகள் விவசாய மூலதன கடன், கோழிப் பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்களுக்கும், கல்வி மற்றும் நகைக்கடன் ஆகியவற்றை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று, விவசாயத்தில் சரியான வருவாய் இன்றி, கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிபில் ரிப்போர்ட் பிரச்சினையில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த நிலையில், தற்போது அங்கும் சிபில் ரிப்போர்ட் பார்ப்பதால், விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசு இதனை கைவிட வேண்டும். இந்தியாவில் பெரும் முதலாளிகள் கடன் பெற்றுவிட்டு வெளிநாடுகள் தப்பிச் செல்லும் நிலையில், பிறருக்கு உணவளிக்கும் விவசாயிகளை அரசு வஞ்சிக்காமல் வாழ வைத்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும்” என்று அவர்கள் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் பலர் பங்கேற்று, தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் கட்டாயம் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.