சென்னை: ‘தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது’ என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் நாளை (ஆக.2) புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘அரசின் கோடிக்கணக்கான நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் இதுபோன்ற அரசு திட்டங்களை தனி மனித சாதனை போலவும், ஆளுங்கட்சியின் திட்டங்கள் போலவும் விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது. அரசு இயந்திரம் பொதுமக்களுக்கான அரசு திட்டங்களை செயல்படுத்தும்போது அரசியல் கட்சிகளின் எந்த அடையாளமும் அதில் இடம்பெறக்கூடாது. ஆனால் தற்போது எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிது, புதிதாக முதல்வரின் பெயர்களில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.
எனவே, தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பெயரை நீக்கவும், அந்த திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர்களும் திமுக மூத்த சித்தாந்த தலைவர்களுமான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரது புகைப்படங்களை நீக்கவும், திமுக சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அரசின் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை அரசின் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது.
எனவே தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அதேபோல அரசின் திட்டங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் மற்றும் கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், தேர்தல் ஆணைய உத்தரவுகளுக்கும் முரணானது. ஆனால் தமிழக அரசு புதிதாக தொடங்கவுள்ள திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே தொடங்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எதிராக நாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சில விளக்கம் தேவை எனக் கோரி அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் கோரி மனு தாக்கல் செய்தால் முறையாக விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதனால், தமிழக அரசு இன்று (ஆக.2) தொடங்கவுள்ள நலம் காக்கும் மருத்துவம் மற்றும் ஏற்கெனவே தொடங்கியுள்ள உங்களுடன் ஸ்டாலின் ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.