மதுரை: தமிழகம் முழுவதும் மது மற்றும் போதைக்கு எதிராக 100 இடங்களில் கருத்தரங்கு நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 6 தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் 1000-க்கும் மேற்பட்ட மக்களை மாஞ்சோலை பகுதியிலேயே குடியமர்த்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு சொந்த மக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாதாடியது.
இதையடுத்து, மாஞ்சோலை மக்களுக்கு குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகளை நிறுத்தாமல் அளிக்கக் கோரி மனித உரிமை ஆணையத் திடம் புதிய தமிழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையேற்று மாஞ்சோலை மக்களுக்கு மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவு நிறைவேற்றப் படவில்லை.
இதனால், மாஞ்சோலை மக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த 2 நாளாக முற்றிலும் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதியை நெல்லை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இது கண்டிக்கதக்கது. மாஞ்சோலை மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 60 சதவீதம் பேர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். மது குடிப்பதால் முதலில் இரப்பை, பின்னர் கல்லீரல், அடுத்து இதயம் பாதிக்கப்படும். ஒரு நாள் மது குடித்தாலே உடல் நலம் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கள் சிறந்த உணவு, குழந்தைகள் கூட குடிக்கலாம் என சிலர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். இந்தச் செயல் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
4 டிகிரி செல்சியஸில் கள் இறக்கி 10 டிகிரி செல்சியஸில் வைத்திருந்தால் மட்டுமே கள் உணவாகும். 24 மணி நேரம் வைத்திருந்தால் அது 16 சதவீத ஆல்கஹால் கலந்த மதுவாகும். கள் உணவு அல்ல. அது ஒரு போதைப் பொருள். திருக்குறள், சிலப்பதிகாரத்தில் கள்ளின் தீமை குறித்து பாடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கள், மது, சாராயத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி சார்பில் 100 கருத்தரங்கு நடத்தப்படும். முதல் கருத்தரங்கு ஜூலை 27-ல் திருச்சியில் 1,000 பெண்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடத்தப்படும். ஆகஸ்ட் 2-ல் தேனியிலும் நடத்தப்படும்.
புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் நடத்தப்படும். மாநாடு தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. மத்திய அரசு பெயர் மாற்றத்துடன் நின்று கொண்டது. பட்டியல் மாற்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர, பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். உத்தரவாதம் தராததால் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டோம். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 2026-ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை இப்போது வலியுறுத்துவது சரியாக இருக்காது.
திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. கல்வி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் 2026-ல் நல்லாட்சி அமைய வேண்டும். நம்முடைய கருத்துகளையும் உள்வாங்கிய குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் அனைத்து மக்களும் உள்ளடங்கிய ஆட்சி அதிகாரம் அமைய வேண்டும்.
இந்த நேரத்தில் தேவேந்திரகுல வேளாளர்களை குழப்பும் வகையிலும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நோக்கத்திலும் சில அமைப்புகள் திருச்சி, திண்டுக்கல்லில் மாநாடு அறிவித்துள்ளன. இதற்கும் புதிய தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை. சிலர் தங்களின் அரசியல் களத்துக்காக பொய் பிரச்சாரம் செய்து தேவேந்திர குல வேளாளர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என்ற நோக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை புதிய தமிழகம் சந்திக்கும்” என்று அவர் கூறினார்.