சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும் என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி, “13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர். எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இது தொடரும்.
காவல் துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி கோரிப் போராட வேண்டிய நிலை ஏற்படும். காவல் துறை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுமா அல்லது நீதிமன்ற உத்தரவின்படி எங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் மேலும் வலுவடையும்” என்றார்.
மேலும், “திருமாவளவன் எந்த நோக்கத்துடன் அவரது கருத்துகளைத் தெரிவித்தார் என்பது தெரியவில்லை. தவறான நோக்கத்தில் கூறியிருக்க மாட்டார். அவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. குப்பையை மனிதர்கள் சுத்தம் செய்யக் கூடாது, இயந்திர மனிதர்கள் ரோபோக்கள் மூலம்தாம் அகற்ற வேண்டும் என்ற நிலை வந்தால் அதை வரவேற்போம். ஆனால் குப்பையை மனிதர்கள் அகற்றும் வரை அவர்களுக்கு பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்” என்றார்.
நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த கோரியும், சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின்போது போலீஸ் தாக்குதலை கண்டித்தும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப் பணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், பணியை மேற்கொள்ள அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும். மதுரை மாநகராட்சியில் அவர் லேண்ட் தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்: தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை தாக்கி, கைது செய்தது தவறு. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்காமல், தொழிலாளர் நல சட்டங்கள் எதையும் பின்பற்றாமல் ஒப்பந்த நிறுவனங்களால் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கடுமையாக சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ பிடித்தங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் செய்யும் மோசடிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பள ரசீது, அடையாள அட்டை, உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சேலம்: சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்கு முறையை ஏவிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியு சேலம் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மயத்தை கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.