சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 78 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. 1992-ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப். 1-ம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
புதிய சுங்கச்சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடரும் நிலையில், இதர 25 சுங்கச்சாவடிகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்த அறிக்கையில், “நெடுஞ்சாலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது. சுங்கச்சாவடி எண்ணிக்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்தி மக்களை பரிதவிக்கச் செய்யக்கூடாது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப்பதிவில், “சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்துக்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். கட்டண உயர்வை கைவிடாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.