நாகப்பட்டினம்: மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில் வெற்றிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடப்பாண்டு 236 வட்டாரங்களில் 369 பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கான தொடக்க விழா நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
தலைமை வகித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: 43 லட்சம் தமிழக மாணவர்கள், 32 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு தரவில்லை. நிதியை கொடுக்காமல் சில கொள்கைகளை (மும்மொழி கொள்கை) ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். அதை ஏற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ரூ.2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும்கூட, எங்கள் கொள்கை மாறாது.
எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு தடையாக இருக்காதீர்கள். தயவு செய்து ஒதுங்கி கொள்ளுங்கள். எங்கள் பிள்ளைகள் எல்லாம் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாகை எம்.பி.செல்வராஜ், எம்எல்ஏ நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.