சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்றார். அடுத்து, செப்.13-ம் தேதி மதுரையில் பூத்கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பாஜக மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அக்.26-ம் தேதி கோவை, நவ.23-ம் தேதி சேலம், டிச.21-ம் தேதி தஞ்சாவூர், 2025 ஜன.4-ம் தேதி திருவண்ணாமலை, ஜன.24-ல் திருவள்ளூரில் பூத் கமிட்டி மாநாடுகள் நடைபெற உள்ளன. நிறைவாக சென்னையில் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தெரிவித்திருந்தது.
நெல்லை மாநாட்டுக்கு அமித் ஷாவை அழைத்து வந்ததுபோல, அடுத்தடுத்து நடைபெறும் பூத் கமிட்டி மாநாடுகளுக்கு தேசிய தலைவர்களை அழைத்து வரபாஜக திட்டமிட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சியான அதிமுகவும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தேசிய தலைவர், குடியரசு துணை தலைவர் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு, இந்த மாநாடுகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: நெல்லை பூத் கமிட்டி மாநாடு அமித் ஷாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதேசமயம் பூத் கமிட்டிஅமைக்கும் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், அடுத்தடுத்த பூத் கமிட்டி மாநாடு நடத்துவதிலும் பெரிய அளவிலான திட்டமிடல்கள் சரியாக நடைபெறவில்லை.
முதலில் கட்சியில் உள்ள குழப்பங்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரம்மாண்ட மாநாடுகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடுகளில், பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பாக, கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் களையப்பட்டு, மேலும், பல புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
பிரதமர் பங்கேற்கும் மாநாடுகளுக்கு முன்பாக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சி தலைவர்களை மாநாட்டு மேடையில் ஒன்றாக அமர வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே, மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை இனிமேல் எதிர்பார்க்கலாம். இதனால் தொண்டர்களும் உற்சாகமாக பணியாற்றுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.