கோவை: “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம் 63.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்து ரத்தினம், செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை சார்ந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 45 ஆயிரத்து 867 பேர். உற்பத்தி துறை சார்ந்தவர்கள் 11 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். நாட்டின் மொத்த எம்எஸ்எம்இ வளர்ச்சியில் தமிழ்நாடு 15 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக போட்டி மாநிலங்களுக்கு இணையாக தொழில் கொள்கை வகுக்காத காரணத்தால் கடும் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் தமிழக மின்வாரியம் நுகர்வோரின் எதிர்ப்பை புறக்கணித்து 2022, 2023, 2024 என மூன்று ஆண்டுகளில் 59.61 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் நலிவடைந்து வெளியேறியுள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இத்தகைய சூழலில் தமிழக அரசு நான்காவது முறையாக மீண்டும் 3.16 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்தல், நிலை கட்டண உயர்வை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர், அமைச்சர்களை பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு வசூலிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு தொடர்ந்தவரின் கட்டணத்தை ரத்து செய்து இதுவரை வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மின்வாரியம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு தொடராத மற்றவர்களிடம் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கு தொடர்ந்தால் மட்டும் ரத்து உத்தரவு பெற முடியும் என்ற நிலையில் உள்ளது. பசுமை ஆற்றல் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரின் கொள்கை முடிவிற்கு எதிராக தமிழ்நாடு மின்வாரியம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து மின்கட்டணம் தொடர்பான தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டமைப்பு சார்பில் தொழில்துறையினர் போட்டியிடும் நிலை ஏற்படும். தேர்தலில் நிற்க வேண்டும், அரசியல் செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. தொழில் வளர்ச்சிக்கு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.