சென்னை: ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீடு மற்றும் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
அதன்படி, ஜெர்மனியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று டசல்டார்ஃப் நகரில் நார் பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம், இபிஎம்- பேப்ஸ்ட் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
ஜெர்மனியின், முனிச் நகரை தலைமையகமாக கொண்ட நார்-பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரம், சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலை வழங்கும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஹேம்பர்க் நகரை தலைமையகமாக கொண்ட நோர்டெக்ஸ் குழுமம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மல்ஃபிங்கன் நகரை தலைமையகமாக கொண்டுள்ள இபிஎம்-பேப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள், மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும் தமிழகத்தில் அதன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தவும் 250 பேருக்கு வேலை அளிக்கும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொண்டது.
முனிச் நகரை தலைமையகமாக கொண்டுள்ள பிஎம்டபிள்யூ குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமோடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழகத்தில் ஆட்டோமோடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்த நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், அந்த நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், பிஎம்டபிள்யூ இந்திய நிறுவனத்துக்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இங்கிலாந்து சென்றார் முதல்வர்: ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அயலக தமிழ் அமைப்பு நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கிறார். முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார்.
‘தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள்’ – ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு: ஜெர்மனியின் கொலோன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
உலக நாடுகளை குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல, நமது தமிழகமும் வளர வேண்டும். எனவே, உங்கள் தாய் மண்ணுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சிறிய வணிகம் செய்தாலும், தமிழகத்திலும் தொடங்க முயற்சி செய்யுங்கள். பெரிய நிறுவனங்களில் வேலை செய்கிறீர்கள் என்றால், தமிழகத்தில் உள்ள வாய்ப்புகள் பற்றி உங்கள் நிறுவனத்தில் எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். இந்த பூமியில் எங்கு சென்றாலும் தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளுடன் தமிழகம் வாருங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.