சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் பாமகவின் 8 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்றும் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம்.
மற்றவர்களை ஆட்சியில் அமரவைக்க பாமகவை தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் விரைவில் செய்யப்படும். வரும் 2026-ல் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும். அதன்பிறகு தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். பாமகவில் தற்போது சிறிய குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எல்லாம் மறைந்து விடும். பாமக ஜனநாயகக்கட்சி. நிரந்தரம் தலைவர் என யாருக்கும் கிடையாது.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுபவருக்கே கடிதம் கொடுக்கும் அதிகாரம் வழங்கப்படும். தற்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனினும், தொண்டனாகவே செயல்படுகிறேன். அனைத்து மதம், ஜாதிக்கு பொதுவான கட்சி பாமக. நிர்வாகிகளுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன்.
யார் யாருக்கு பொறுப்பு கொடுத்தோமோ அவர்கள் அனைவரும் தொடர்வார்கள். எந்த குழப்பமும் யாருக்கும் வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழு தலைவர் செல்வகுமார், வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் வைத்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.