சென்னை: தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதத்தின் உயர் கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு புதிய வாசல்களை திறந்திடவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2020-ல் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. திமுக அரசு, இந்த தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாக மேடைகளில் வீராப்பு காட்டி வருகிறது. ஆனால், இதே தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட மாநில பள்ளிக் கல்விக் கொள்கையில் தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
பள்ளிக் கல்வியில்தான் இப்படி என்றால், மாநிலத்தில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன என்று செய்திகள் வந்துள்ளன. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசியலுக்காக கடுமையாக எதிர்த்தாலும், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்கள் கல்விக் கடன் வங்கிகளை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் சிறப்பான பங்காற்றுகின்றன. திமுக அரசை நம்பியிராமல் தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று அதன் பயன்களை மாணவர்களுக்கு அளித்து வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக அரசோ மலிவான அரசியலுக்காக தேசியக் கல்விக் கொள்கையை மேடை போட்டு எதிர்ப்பதிலேயே தனது ஆற்றலை செலவழித்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.