சென்னை: தமிழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் வடதமிழத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மே 19-ம் தேதி (நேற்று) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்று (மே 20) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 23-ம் தேதி சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்குப் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக்கடலில் கர்நாடக, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும்23-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைமழை தற்போது வரை 192.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவு 101.4 மி.மீ. இது சராசரியைவிட 90 சதவீதம் அதிகமாகும். தென்மேற்குப் பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்கும். அதற்குப் பிறகு கேரளாவையொட்டிய தமிழகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விரிவடையக்கூடும்.
கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21-ம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதனால் 22-ம் தேதி அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.