சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்நிலையில், ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரங்கள் அந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.
உத்தேச வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக இம்மாத இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைப் பெற்று வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பின்னர் மாவட்ட வாரியாக வாக்குச்சாவடிகள் பட்டியல்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வெளியிடப்பட உள்ளது. அதன், பின்னர் புதிய வாக்குச்சாவடிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுப்பி வைக்க உள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உருவாகி, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 74 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வாக்குச்சாவடிஅலுவலர்களாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்தல் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்தல்களில் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.