சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளரிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்திருக்கிறோம். அந்தக் கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பு பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் இடம்பெற்றுள்ளது.
மூன்றவதாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை முகவர்களையும் இணைந்து செயலாலற்ற நடைமுறைகளை வகுத்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும், நான்காவதாக, வாக்குப் பதிவில் ஏற்பட்டு இருக்க கூடிய சில திருத்தங்கள் முறையற்றது, அந்த முறையற்ற சில திருத்தங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாவதாக, எப்படி பிஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறதோ அதைபோல் தமிழகத்திலும் நடக்க இருப்பதால், இங்கே ஆதார் எண்ணையும், குடும்ப அட்டையும் ஒரு வாக்காளருடைய அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்டு இருந்தோம். இந்த ஐந்தாவதாக உள்ளதைத் தவிர, மற்ற நான்கையும் உடனே பரிசீலித்து ஆவண செய்வதாக தேர்தல் ஆணையம் சொன்னது. ஆனால், இதுவரையில் அந்த வழியில் எந்த ஒரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
எனவே, இவற்றையெல்லாம் வலியுறுத்தி இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பிஹார் மாநிலத்தில் நடக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நாடே பார்த்து கொண்டு இருக்கிறது. ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்து நிற்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது. இண்டியா கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்க கூடிய திமுக, இந்த தேர்தல் ஆணையத்தின் செயலை எதிர்க்கும். எதிர்த்து போராடும்.
எனினும் கூட தமிழகத்தில் அப்படி ஒரு சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே இங்கே அதுபோன்ற எந்த வாக்குகளையும் நீக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கடமை என்று நினைக்கிறோம். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது” என்றார்
மேலும், “சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் படி ஒவ்வொரு வாக்காளரும் ஒரு படிவத்தை நிரப்பித் தர வேண்டும். அப்போதுதான் அவர் வாக்காளர் ஆக முடியும். இரண்டாவது, உங்களுடைய பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் இருந்தது என்றால், நீங்கள் வெறும் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும். அவருடைய குழந்தைகள் அந்த வாக்காளர் பட்டியலுடைய நகலை எடுத்து படிவத்தை நிரப்பி தந்தால் போதும். அப்படி இல்லாதவர்கள் அனைவரும் இருப்பிட சான்றிதழையும் பிறப்பு சான்றிதழையும் தர வேண்டும். இந்தச் சான்றிதழ்கள் எத்தனை மக்களிடம் இருக்கும்? எத்தனை சாதாரண மக்களிடம் இருக்கும்? அடித்தட்டு மக்களிடம் இருக்கும்? இதுதான் மிகப் பெரிய கேள்வி.
இந்தப் பணி தமிழகத்தில் நடக்கும்போது இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக் கூடாது. வீடு வீடாக சென்று பார்ப்பது என்றால், பாக நிலை அலுவலர் உண்மையிலேயே வீடு வீடாகச் செல்ல வேண்டும். அதற்கான கணக்கீடுகளை எடுக்க வேண்டும். கணக்கீடுகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய பாகநிலை முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
இவையெல்லாம் நாங்க சொல்லவில்லை. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய கையேடுகளில் இருக்கிறது. இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றாமல் நடந்ததுதான் பிஹார் வாக்காளர் திருத்த பட்டியல். அதுபோன்று தமிழகத்தில் நடந்துவிடக் கூடாது. நடக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. தமிழகத்தில் சிறப்பு திருத்தம் நடத்தவேண்டும் என்றால், இங்கே இருக்கக்கூடிய 6 கோடியே 34 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால் போதாது. அவர்கள் உரிய ஆவணங்களை பெறுவதற்கும் படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்போம்.
திராவிட முன்னேற்ற கழகம் எப்போதுமே வாக்காளர் பட்டியல் சிறந்த முறையில் அமைக்கப்பட வேண்டும். உண்மையான வாக்காளர்களைச் சேர்த்திட வேண்டும். போலியான வாக்காளர்களை நீக்க வேண்டும். அது உண்மையான வாக்காளர் பட்டியலாக இருக்க வேண்டும் என்பதில் அழுத்தம் திருத்தமாக, தங்களுடைய கோரிக்கையாக வைத்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று கூட உச்ச நீதிமன்றத்தில ஒரு வழக்கறிஞர் பிஹாரில் இறந்ததாக நீக்கப்பட்ட இரண்டு வாக்காளர்களை உயிருடன் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தினார். அது போன்ற முறைகேடுகள் நடக்க கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது. அது சட்டப்படியான உரிமை. அதற்கு அவர் மூன்று அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்று, இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். இரண்டு, 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். மூன்றாவது, அந்த இடத்தில் சாதாரணமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அதாவது, ஆர்டினரி ரெசிடெண்டாக இருக்கணும். அந்தத் தகுதி உடையவர்களில் யார் வேண்டுமானாலும் இங்கு வாக்காளர் ஆகலாம். ஆனால் யார் ஆர்டினரி ரெசிடென்ட் என்பதில்தான் பிரச்சினை இருக்கின்றது.
வெளியிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு வாக்காளரும் தான் எப்போதுமே இங்கேதான் வசிக்க போகிறேன் என்பதை நிரூபிக்க வேண்டும். அவருடைய குடும்பம் வேறு மாநிலத்திலிருந்து அவர் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இங்கே இருந்து வந்துவிட்டு போகிறவராக இருந்தால், அவர் சாதாரணமாக குடியிருப்பவர் என கருதப்பட மாட்டார். இதான் பிரச்சினை.
தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுருக்கிறது. இந்த 11 ஆவணங்கள் மட்டுமல்லாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்ற ஆவணங்களையும் நாங்கள் பார்ப்போம் என்று சொல்லிருக்கின்றார்கள். அதாவது ஆதார் அட்டையை தவிர மற்ற எல்லாத்தையும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வோம் என்று சொல்லிருக்கின்றார்கள். அப்போது இங்கே கொடுக்கக்கூடிய பட்டா போன்ற அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட மற்ற எல்லா அடையாள அட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
முன்பே தேர்தல் ஆணையத்தை பாஜக இந்த கேள்வி கேட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஈவிஎம் மிஷனை அறிமுகப்படுத்தியபோது, இதே பாஜகதான் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் உடைய கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். இப்போது எப்படி மாறிவிட்டது. இவர்கள் மிக மோசமாக தேர்தல் ஆணையத்தை தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் இவ்வளவு பெரிய மோசடியை செய்து, ராகுல் காந்தி சொன்னதை போல, கர்நாடக மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலம், ஒடிசா மாநிலம் உள்ளிட்ட எல்லா மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலை முறையற்ற வகையில் திருத்தங்கள் செய்து, வெற்றி பெற்றுகொண்டுள்ளார்கள்” என்றார்.