மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றக் கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலாளர், இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்த நீதிமன்றத்தில் பயிற்சி செய்த வழக்கறிஞர் சில மாதங்களுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வருவது அவசியம்.” என வாதிடப்பட்டது.
தமிழக பார் கவுன்சில் தரப்பில், சட்ட முன்வரைவு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழக சட்டத்துறை செயலர், இந்திய, தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. மூவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது.” என உத்தரவிட்டனர்.