சென்னை: தமிழகத்தில் எம்.பி.,-க்களுக்கு அலுவலகம் கிடைக்காதா? என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:2019-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுமே எம்.பி.க்களுக்கு அண்டை மாநிலங்களைப்போல அலுவலகம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு நான் கோரிக்கை வைத்தேன். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு திமுக அரசிடமும் கோரினேன்.
தமிழக முதல்வரிடமும் விசிக தலைவர் திருமாவளவனால் எழுத்துப் பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை.
வெளியூர் எம்.பிக்கள் சென்னைக்கு வந்தால் அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் இல்லை. சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் வாடகைக்கு ஒரு அறை வாங்குவதற்குள் திரும்பவும் ஊருக்கே போய்விடலாம் என்றே எண்ணத் தோன்றும்.
17-வது மக்களவை முடிந்து 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இதுவரை இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது.
இப்போதாவது இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுமா? தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா முதலான மாநிலங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளனவோ அவற்றைச் செய்து தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.