சென்னை: மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டி வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் சமுதாயத்தில், பாலின வேறுபாடுகளை களையவும், பெண்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உரிய அங்கீகாரம், சமூக நீதி, சமத்துவத்தை அளிக்கவும், “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை” கடந்தாண்டு வெளியிடப்பட்டது. மேலும் விடியல் பயணத்திட்டத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் என இதுவரையில் 682.02 கோடி முறை பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்தால், மாதம் ரூ.888 வரை பெண்கள் சேமிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இதுவரை 1.15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகின்றனர். இந்த உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நேரடி பணப்பரிமாற்ற முறைப்படி, 4.95 லட்சம் மாணவிகள் வங்கிக்கணக்கில் பெறுகின்றனர்.
சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் மகளிருக்கு பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதை களைய, 13 தோழி விடுதிகள் 1303 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் 14 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 2021 மார்ச் 31-ம் தேதி நிலுவையில் இருந்த ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1 லட்சத்து 17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15 லட்சத்து 88,309 பேர் பயன்பெற்றுள்ளனர். அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவலக மகளிர் பணியாளர்கள், ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உச்ச வரம்பை ரூ.12 லட்சம் என்பதில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 2021-25 வரை ரூ.1 லட்சத்து 12,299 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர், உதவியாளர்களுக்கான ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வியுடன் நின்று விடாமல், தொழில் முனைவோராக்கும் நடவடிக்கையாக, பெண் தொழில் முனைவோரின் புத்தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை மானிய நிதி வழங்கப்படுகிறது. தேசிய அளவில், பணிபுரியும் மகளிரில் 41 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, மகளிருக்கான கலைத்துறை வித்தர் விருது, கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டுள்ளது. கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில், நியமிக்கப்பட்ட 42 ஓதுவார்களில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், லட்சக் கணக்கான மகளிர் பொறுப்புகளை பெற்றுள்ளனர். 21 மாநகராட்சிகளில் 11 மேயர்கள் பெண்கள் என்பது தமிழகத்துக்கான சிறப்பாகும். மேலும் தமிழககத்தின் 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களில், ஏறத்தாழ 3.23 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இவ்வாறாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசில் புதிய புதிய திட்டங்கள் நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.