சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நேற்று வெளியிட்ட சுதந்திர தின உரையில் ஆளுநர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையும், துடிப்பு மிக்க தலைமையின்கீழ் நம்நாடு அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனை களைப் படைத்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் உடனான போர் நடவடிக்கைகளின் வெற்றி காலத்துக்கும் நினைவுகூரப்படும். வளர்ச்சி அடைந்த பாரதம்- 2047 என்ற நமது தேசிய பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும், பொறுப்புணர்வும் தமிழகத்துக்கு உள்ளது.
எனவே, தமிழக வளர்ச் சியை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதற்கு மத்திய அரசும் நிதி பகிர்வு உட்பட பல்வேறு வழிகளில் உதவியாக உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை பாதுகாத்து உயர்த்த மத்திய அரசு பல்வேறு முன்னெ டுப்புக்களை செய்து வருகிறது.
நமது விவசாயச் சந்தைகளை விலை மலிவான வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு திறந்துவிட வேண்டுமென அன்னிய சக்திகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதற்கு அனுமதி வழங்கமாட் டேன் என்று பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருக்கிறார். அதேநேரம் தற்போதைய சூழலில் மக்கள் எதிர்நோக்கும் தீவிரமான சவால்களில் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
அவை, ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்பவருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு, அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு, இளைஞர்களிடம் வேகமாகப் பரவும் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள்-சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் உயர்வு ஆகியவையாகும்.
கற்றல், கற்பித்தலில் வீழ்ச்சி: தமிழக அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் விளிம்புநிலையில் இருப்பவர்களே படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியை கண்டுள்ளன. ஏஎஸ்இஆர் வெளியிட்ட அறிக்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியைவிட குறைவாக இருக்கும் உண்மை வெளிவந்துள்ளது. 50 சதவீத உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை.
தமிழகத்தில் ஆண்டுக்கு 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக, அதாவது தினசரி 65 தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டிலேயே மிக அதிகமாகும். இந்த சூழ்நிலையை தணிக்க அவசர தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோல், போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களைவிட அதற்கு முந்தைய ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன போதைப் பொருள்களின் அளவு 14 மடங்கு அதிகமாகும். இதுதவிர சமீபத்திய ஆண்டுகளில் நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை காண முடிகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளன. இந்த விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் காண்போம் என்பது வெற்றுக் கனவல்ல, அது நமது தேவை. நாம் என்ன செய்தாலும் அதில் தேசத்தின் நலனே பிரதானம் என செயலாற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.