Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
    மாநிலம்

    “தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

    adminBy adminAugust 14, 2025No Comments11 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை: “நமது தேசத்தின் சிறப்புமிக்க 79-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், நீண்டகால ஒடுக்குமுறை காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உள்பட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.

    இந்த சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்புற ஆக்கிரமிப்புகள் மற்றும் உள் குழப்பங்களிலிருந்து பாதுகாத்து, நமது அரசியலமைப்பு, சமூகம் மற்றும் அரசியலின் பன்முக மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, உச்சபட்சமாக இன்னுயிரைத் தியாகம் செய்த ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் வீரர்களுக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

    நமது தேசிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திலேயே தனது துடிப்பான மக்களான இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், விஸ்வகர்மாக்கள், தொழில்முனைவோர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொழில், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள், கல்வித்துறை, கலை – கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றில் உள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரின் விடாமுயற்சியுடன் தனது இலக்கை நம்பிக்கையுடன் எய்தி வரும் ஒரு புதிய பாரதத்தின் எழுச்சிக்கு சாட்சியாகவும், தீவிர பங்கேற்பாளர்களாகவும் இருப்பது நமது நற்பேறாகும்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், துடிப்பும் மிக்க தலைமையின் கீழ், நமது சமூக மற்றும் தேசிய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனைகளை பாரதம் இயற்றி வருகிறது. பாரதம் தொடர்ந்து அற்புதமான சாதனைகளுக்கான வரம்பை நிர்ணயித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில், நமது 30 கோடி சகோதர, சகோதரிகள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராதது. பாரதம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாகவும் மாறியுள்ளது.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாம் 10-ஆவது பெரிய பொருளாதார தேசமாக இருந்தோம். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பாரதத்தை மிகவும் சமமான சமூகங்களில் ஒன்றாக – உலகின் நான்காவது மிகவும் சமமான சமூகமாக அறிவித்துள்ளன. வேகமாக முன்னேறும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பாரதத்தின் மாடலைக் கண்டு உலகம் வியக்கிறது. இது உண்மையிலேயே அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும் என்பதை நோக்கமாகக் கொண்ட மாடல் ஆகும்.

    முதல் முறையாக பாரதம் தனது விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி அவர் அங்கு சுமார் இரண்டு வாரங்கள் தங்கி, நமது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு முக்கியமான பரிசோதனைகளை மேற்கொண்டார். வெற்றிகரமான விண்வெளிப் பயணமும், நமது விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லாவின் மகிழ்ச்சியான தாயகம் திரும்பலும் தேசத்தை மகிழ்ச்சியாலும் பெருமையாலும் நிரப்பின.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் மதத்தை அடையாளம் கண்ட பிறகு, அவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதற்கு பதிலடி தரும் விதமாக, பாரதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை உறுதிபட அழித்து, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.

    பாகிஸ்தான், அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையில், பாரதத்தின் மீது ராணுவ எதிர்த்தாக்குதல்களை நடத்தியபோது, அதன் அனைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் விமானங்களை வானிலேயே நமது ராணுவம் அழித்தது மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவத்தை முடக்கிப்போடும் அளவுக்கு கடுமையான அடியையும் கொடுத்தது.

    நமது ராணுவம் விமான தளங்கள் உள்பட பாகிஸ்தானின் முக்கியமான சொத்துக்களை அழித்தது. இது பாகிஸ்தானை அவசர போர் நிறுத்தத்துக்கு மன்றாட கட்டாயப்படுத்தியது. குறுகிய, விரைவான மற்றும் துல்லியமான ராணுவ நடவடிக்கையில் பாரதத்தின் இந்த தீர்க்கமான வெற்றி உலக ராணுவ வரலாற்றில் படிக்கப்பட்டு நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும்.

    பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்பு வலிமையை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலகுக்கு பறைசாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளப்படாது என்ற தனது கொள்கையை பாரதம் முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்ததுடன் பயங்கரவாத தாக்குதல் ஒரு போர்ச் செயலுக்கு ஒப்பானதாக கருதப்படும் என்ற புதிய இயல்பை நிர்ணயித்து, எதிர்காலத்தில் இப்படி நடந்தால் எதிரி மீது தக்க முறையில் பாடம் புகட்டப்படும் என்பதை வெளிப்படுத்தியது.

    ஆபரேஷன் சிந்தூர், ஒவ்வொரு பாரதியரின் உள்ளத்திலும் பெருமிதத்தை நிரப்பியது. நமது மாபெரும் புலவர் ஐயன் திருவள்ளுவரைப் பின்பற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துக்கும் தயாரான, தரமான ஆயுதம் தாங்கிய மற்றும் உயரிய மாண்புடைய ராணுவத்தின் மதிப்பை நன்கறிந்தவர். இதையே வள்ளுவப் பெருந்தகை,

    உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

    வெறுக்கையு ளெல்லாம் தலை.

    என்று தனது 761ஆவது குறளில் நமக்குக் கற்பிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதுமில்லாத மாற்றங்களுக்கு பாரத ராணுவம் உள்பட்டு அதன் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயலுணர்வு மேம்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடற்படை ஆகிய அனைத்து படைகளுக்கும் இடையே முன்னெப்போதுமில்லாத வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச்செயலுணர்வு ஏற்பட்டுள்ளது.

    ஆயுதத் தொழிற்சாலைகளை மறுசீரமைத்து மீள்-நோக்கச் செய்ததன் மூலம் அவற்றின் புதுமை மற்றும் உற்பத்தித் திறன்கள் பன்மடங்காகியுள்ளன. இது சிறந்த தரமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்ய வழிவகுத்தது. பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறைக்கு வாய்ப்பளித்ததன் மூலம் பாதுகாப்புத்துறையில் நமது சுயசார்புநிலை கணிசமாக பலம் பெற்றுள்ளது.

    மிகப்பெரிய அளவில் ஆயுதம் வாங்கும் நாடு என அடையாளம் காணப்பட்ட நாம் இன்று பல நாடுகளுக்கு ராணுவ தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் துறை பாதுகாப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் சில நமது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே அமைந்துள்ளன. மத்திய அரசு உருவாக்கிய இரண்டு பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. இது நமது மாநிலத்தில் புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமைகிறது. இது நமது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

    பொருளாதார வளர்ச்சியில் பாரதத்தின் ஆறு தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக, தமிழ்நாடு பல பத்தாண்டுகளாக விளங்கி வந்திருக்கிறது. இதன் தொழில்துறை அடித்தளம் கணிசமானது – ரயில்பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், டிஜிட்டல் துறை ஆகியன கவனத்தை ஈர்க்கக்கூடியவை.

    தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக் கட்டமைப்புகள் மற்ற பல மாநிலங்கள் பொறாமைப்படக்கூடிய வகையில் உள்ளன. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற நமது தேசியப் பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும் பொறுப்புணர்வும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. வளர்ந்த தமிழ்நாடு, வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு முக்கியம். எனவே வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க நமது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

    மாநில அரசுக்கு கணிசமான நிதி வழங்கல் உள்பட, மாநிலத்தில் பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள் வாயிலாகவும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வழக்கமான வரிப் பகிர்வைத் தவிர ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை மானியங்களாக வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கியும், மேம்படுத்தியும் வருவதோடு, சமீபத்திய வருடங்களில் ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.

    இவை நமது மாநில உள்கட்டமைப்பு வசதிகளான ரயில்பாதைகள், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களை கணிசமாக பலப்படுத்தியுள்ளது; மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது, நமது தொழிற்துறை மற்றும் வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட உந்துதல் காரணமாக நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. இவைதவிர, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பல்லாயிரம் கோடி ரூபாய் சென்று சேர்ந்திருக்கிறது.

    மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்கு ஊக்கமூட்டும் வகையில், நமது மாநிலத்தில் மத்திய அரசின் நிதியுதவியோடு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

    தமிழ்மொழியும், கலாசார மரபும் நமது தேசத்தின் பெருமைகள். அவற்றைப் பராமரித்து மேம்படுத்துவது நமது கடமை. தமிழ்மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபு ஆகியவற்றின் மிகப்பெரிய அபிமானி நமது பிரதமர். அவருடைய சீரிய தலைமையின் கீழ், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாத்து உயர்த்த, மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கிறது.

    சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நவீன அலுவலகம் கட்டப்பட்டு, நமது உயரிய திருக்குறள் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும், பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் முதல் முறையாக திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் தமிழாய்வுகளுக்கான ஒரு திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழாய்வுகளுக்கான திருவள்ளுவர் இருக்கை, அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் ஒரு அழகான திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

    காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் வருடாந்திர கலாசாரத் திருவிழா, தமிழ் மக்களுக்கும் காசிக்கும் இடையே இருக்கும் பல்லாயிரம் ஆண்டுகள் கலாசாரத் தொடர்புக்கு புத்துயிர் அளித்து வருகிறது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர பாரதத்திற்கு அதிகார மாற்றத்தின் சாட்சியாக விளங்கிய பிரமிப்பூட்டும் சோழ செங்கோல், சம்பிரதாய முறைப்படி புதிய நாடாளுமன்றத்துக்குள் நிறுவப்பட்டுள்ளது.

    மாபெரும் தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவையொட்டி, மத்திய அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐந்து நாள் கலாசாரத் திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தது. இதில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு, தான் கொண்டுவந்த கங்கை நீரால் சோழர்களின் ஆலயத்தில் புனித வழிபாட்டை மேற்கொண்டதோடு, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அவர்களின் நினைவாக அவர்களுடைய பிரம்மாண்ட உருவச்சிலைகளை அமைக்கும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

    ராமநவமியை முன்னிட்டு, மாபெரும் கவிச்சக்கரவர்த்தி கம்பரைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த ஊரான தேரெழுந்தூரில் சிறப்பான 10 நாள்கள் கலாசாரத் திருவிழாவுக்கு இந்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. கம்பர் சமாதி உள்ள நாட்டரசன்கோட்டையில் அவரது சமாதி நாளில் மிகப்பெரிய அளவில் கலாசார நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    விவசாயம், மீன்பிடித்தொழில், பால் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருக்கும் நமது சகோதர, சகோதரிகள் தான் நமது தேசத்தின் அடித்தளங்கள். நமது தேசவளர்ச்சியில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். நமது மாபெரும் புலவர் ஐயன் திருவள்ளுவர் கூட,

    உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

    எழுவாரை எல்லாம் பொறுத்து.

    என்று தனது 1032ஆவது குறளில் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற அனைவருக்கும் ஆதரவளிப்பதன் காரணத்தால், விவசாயிகள் சமுதாயத்தின் அச்சாணிகள் என்பது இக்குறளின் பொருள்.

    நமது தேசத்தின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திலே அவர்களுடைய மிக முக்கிய பங்கையும் இடத்தையும் கருதி அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். நமது விவசாயச் சந்தைகளை விலைமலிவான அயல்நாட்டு இறக்குமதிகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று மிகப்பெரிய பலம் வாய்ந்த அந்நிய சக்திகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

    அப்படித் திறந்துவிட்டால் நமது விவசாயிகள், மீனவர்கள், பால்பொருள்கள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரின் நலன்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படி நடக்க விடமாட்டேன் என்று பிரதமர் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், பால் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சார்பாக, அவர்களின் நலன்களைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர்களுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை, பிரதமர் மோடிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டின் மிகச்சிறந்த மனிதவளங்களில் சிறப்பானது நம்முடையது. நமது இளைஞர்கள் ஆர்வமும், தொழில்முனைவுத்திறனும் மிக்கவர்கள். நமது உள்கட்டமைப்பு கணிசமான பலத்தைக் கொண்டது. விரைவான, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளப்பரிய திறன்கள் நம்மிடம் நிறைந்திருப்பதால் பாரதவளர்ச்சி எஞ்சினாக இருக்க நம்மால் முடியும். அனுகூலமான முன்னேற்றதை விட குறைவான முன்னேற்றத்திற்கு சில சந்தர்ப்பங்களில் நாம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நமது இளைஞர்களின் திறமைகளைக் கட்டவிழ்த்து, அவர்களின் அனுகூலமான திறமைகளுக்கு வாய்ப்பு கொடுக்க, மக்கள் எதிர்நோக்கும் மிகத் தீவிர சவால்களில் சிலவற்றை முழுமனதோடு நாம் எதிர்கொள்ள வேண்டும். அவற்றில் நான்கை நான் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.

    i. ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு.

    ii. அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு

    iii. இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு

    iv. பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள்-சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

    ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக பாகுபாடு: தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டிலும் நாட்டிலேயே நமது மாநிலத்தில் தான் மிகச்சிறந்த கல்வித்துறை உள்கட்டமைப்புகள் உள்ளன. வெளிப்படை காரணங்களால் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு, அரசின் கல்விக் கட்டமைப்புகள்தாம் ஒரே நம்பிக்கை. நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்.

    சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் வறியநிலை மற்றும் விளிம்புநிலையில் இருப்பவர்கள். வருத்தமளிக்கும் வகையில், இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக, ASER அறிக்கை எனப்படும் கல்வித்தரம் பற்றிய வருடாந்திர அறிக்கை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், தேசிய சராசரியை விட மிகவும் குறைவானதாக இருக்கும் அதிர்ச்சி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை.

    தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. சமூக, பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிறருக்கும் இடையே கற்றல் இடைவெளி கூர்மையாக அதிகரித்து வருகிறது. அறிவுசார் போட்டி உலகிலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் இயக்கும் பொருளாதாரத்திலும், நமது வறியநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்புகளின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றவர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள். தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து கண்ணியத்துடன் வாழ முடியாது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறது. இது ஏற்புடையதல்ல, சரிசெய்யப்பட வேண்டியது.

    தலித்துகள் மற்றும் பிறரைப் பிரித்து வைக்கும் சுவர்கள் கிராமங்களிலும், பள்ளிகளிலும் கட்டப்பட்டு வருவதாக ஊடகசெய்திகளில் அன்றாடம் பார்க்கிறோம். பொதுப்பாதையை பயன்படுத்த முற்படும்போது தலித்துகள் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள், சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள்.

    நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, அவமானகரமான சமூகபாகுபாட்டுப் பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நிலவுவது நாம் கூட்டாக அவமானப்படக்கூடிய விஷயமாகும். நான் அவ்வப்போது இதற்கு எதிராக எனது குரலை எழுப்பி வந்திருக்கிறேன். நமது முகத்தில் படர்ந்திருக்கும் இந்தக் கறையை நாமே அகற்ற வேண்டும். சமூக பாகுபாட்டுக்கு எதிராக நாம் சபதமேற்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை, குறிப்பாக எனது இளம் நண்பர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது. ஆண்டொன்றுக்கு 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக, அதாவது அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது நாட்டிலேயே மிக அதிகம். லட்சம் மக்கள்தொகையில் 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. ஆனால் தமிழ்நாட்டிலோ இது 26-க்கும் அதிகமாக இருப்பது, தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

    அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் தற்கொலை செய்கிறார்கள் என்பதோடு, குழுவாகத் தற்கொலை செய்வதிலும் நமது மாநிலம் அதிக மோசமான நிலையில் இருக்கிறது. அதாவது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நண்பர்களே, ஒவ்வொரு தற்கொலையும், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலை என்பது குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும் பெருந்துயரம் என்பதோடு, இது ஒரு தேசியப் பெருந்துயரமும் ஆகும். நமது சமூகத்தில் துல்லியமாக சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த அல்லது பொருளாதாரம் சார்ந்த இடர்பாடுகளின் பிரதிபலிப்பே இந்த தற்கொலைகள். இந்த ஆபத்தான சூழ்நிலையைத் தணிக்க அவசர தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு: போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. கவனிக்கத்தக்கதாக, கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு இளைஞர்கள் மாறிவரும் போக்கு நிலவுகிறது. ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மிக, மிக அதிகமான கவலையை அளிக்கின்றன. கஞ்சா நுகர்வு அதிகரிப்பின்றி மிதமாக இருந்தாலும், மிக, மிக ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடு கடும் உச்சத்தைக் கண்டு வருகிறது.

    பறிமுதல் செய்யப்படும் ரசாயன போதைப்பொருட்களின் அளவைக் கொண்டு, அதன் புழக்கத்தின் வீச்சை கற்பனை செய்து கொள்ளலாம். கடந்த 2024ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை விட அதற்கு முந்தைய ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன போதைப்பொருள்களை ஒப்பிட்டால் அவற்றின் அளவு 14 மடங்கு அதிகமாகும். இது பெரிய அளவில் நமது இளைஞர்களின் உயிரை பலி வாங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும், 2,000 பேருக்கும் அதிகமானோரில் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக தற்கொலை செய்வதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கொடிய அச்சுறுத்தலை தேவை மற்றும் விநியோகம் என இரு தரப்பிலும் சமாளிக்க வேண்டும். போதைப்பொருள்களுக்கான தேவைக்கு எதிராக, பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கண்டிப்பான அமலாக்கம் வாயிலாகவே அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    எனினும், இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. நமது இளைஞர்களைக் கொன்று, நமது மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தை தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக மூழ்கடிப்பவர்கள் அனைவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

    பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: சமீபத்திய ஆண்டுகளில், நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்ஸோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. அலுவல்பூர்வ தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்ஸோ பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. நமது சகோதரிகளும் மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்படுகிறார்கள், பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள்.

    நமது தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறி வருவதை நாம் அறிவோம். நமது மாநிலமான தமிழ்நாட்டில் நமது பெண்கள் தொழில்முனைவோராகவும் லட்சியம் மிக்கவர்களாகவும் உள்ளனர். மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக, கல்வியில் பெண்களின் எழுச்சியை நான் நேரடியாகக் காண்கிறேன். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தங்கப் பதக்கம் வென்றவர்களில் பெண்களே ஆண்களை விட அதிகம்.

    இருப்பினும், நமது சகோதரிகளும் மகள்களும் தங்கள் கனவுகளையும் தொழில் முயற்சிகளையும் தொடர தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச்செய்துவிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டு கடுமையாக ஒடுக்கப்பட வேண்டியது.

    இவை ஒவ்வொன்றும் நம்மை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுத்து, வளமான மற்றும் வளர்ந்த மாநிலம் மற்றும் தேசம் ஆக நாம் மாற வேண்டும் என்ற நமது கனவை சிதைக்கின்றன. இவற்றை தீவிரமாகவும் உடனடியாகவும் சரிசெய்ய வேண்டும்.

    உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலை நிலையற்று உள்ளது. உலகப் பொருளாதாரம் பெரும் சீரற்ற தன்மையை எதிர்நோக்குகிறது. உலகின் பெரும்பகுதியில் போர் பரவிவிட்டது. அதிகார விளையாட்டின் அப்பட்டமான வெளிப்பாடு அரங்கேறி வருகிறது. மனித சமூகத்தின் பெரும்பகுதி, குறிப்பாக உலகத்தின் தெற்கு நாடுகளின் குரல், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. தங்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என அவை பொறுமையிழந்து காத்திருக்கின்றன. இத்தகைய சவாலான நேரத்தில் நியாயமான, சமத்துவமான, நீடித்த உலக ஒழுங்கை அளிக்கும் வகையில் பாரதம் தங்கள் குரலாக ஒலிக்கும் என அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன.

    சமீபத்திய ஆண்டுகளில் பாரதம் மேற்கொண்ட பிராந்திய மற்றும் உலக அளவிலான முன்முயற்சிகளால், அந்த நாடுகள் நம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. பாரதம் ஒரு சமத்துவம் நிறைந்த, நியாயமான, நீடித்த தன்மையுடைய உலக ஒழுங்கை உருவாக்க கடினமாகப் பாடுபட்டு வருகிறது.

    2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் காண்போம் என்பது ஒரு வெற்றுக்கனவல்ல, அது நமது தேவை. அது ஒரு உலகத் தேவையும் கூட. இந்த நன்னாளில், நாம் எங்கிருந்தாலும், வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும், உள்ளத்திலும், சொல்லிலும் செயலிலும் ‘தேசமே முதலில்’ என்ற சிந்தனைக்கு நாம் நம்மை அர்ப்பணிப்போம் என உறுதியேற்போம். அதாவது நாம் என்ன செய்தாலும், அதில் தேசத்தின் நலனே பிரதானம் என செயலாற்றுவோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான சுதந்திர தின நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்! வாழ்க பாரதத்தாய்!” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி உள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

    August 14, 2025
    மாநிலம்

    “ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களின் அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்கும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

    August 14, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    August 14, 2025
    மாநிலம்

    “செல்லூர் ராஜுவுக்கு மிகப் பெரிய அவமரியாதை” – இபிஎஸ் மீது ஓபிஎஸ் சாடல்

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!
    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு
    • தசை வளர்ச்சி மற்றும் மீட்டெடுப்பை அதிகரிக்கக்கூடிய 5 இயற்கை சப்ளிமெண்ட்ஸ் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு
    • ஏர்போட்கள் காரணமாக சமூக ஊடக பயனர் தனது விசாரணையின் ஒரு பகுதியை இழக்கிறார்; நீண்டகால பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கைகள்; ‘நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் ….’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.