திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது : எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அதுகுறித்து பின்னர் தெரியவரும்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, இபிஎஸ் தலைமையில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும். மக்கள் வாக்களித்த பின்னர்தான் எது வலிமையான கூட்டணி என்பது தெரியவரும். தாங்கள்தான் வலிமையான கட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக, தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா? திமுக கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பு போகப்போக வெளியாகும்.
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த மாநாடு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள முருக பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.
அனைவரும் இந்துக்கள்… நாட்டில் மதவாதம் இருக்கக் கூடாது. மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வருபவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தில் 14-வது இடத்தில் இருந்த நாட்டை 4-வது இடத்துக்கு பிரதமர் கொண்டு வந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ 10 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா பாக்கியில்லாமல் ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குகிறது. ஆனால், இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து பேசுகிறார்கள்.
தமிழ் மொழிக்கு மோடி அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து, உலகம் முழுமைக்கு கொண்டு சேர்த்துள்ளார் காசியிலும் குஜராத்திலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.