சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, குப்பணம்பட்டியில் 9 செ.மீ மழை, பேரையூரில் 8 செ.மீ மழை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 செ.மீ, கரூர், கடலூர் மாவட்டம் லக்கூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தலா 5 செ.மீ மழை, வேலூர் மாவட்டம் மேலாலத்தூர், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், ராசிபுரம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, எழுமலை, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.