சென்னை: தமிழகத்தில் நாசவேலை செய்ய உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் சிலர், பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
2014-ல் சென்னை மண்ணடியில் பதுங்கி இருந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளி சிவபாலன், சலீம், ரபீக் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதே ஆண்டில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த அருண் செல்வராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
அவர்களின் விசாரணையில், கைதானவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளம் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
மேலும், இதற்கு மூளையாக செயல்பட்டது இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றிய அமீர் சுபைல் சித்திக்கும் அங்கு பணிபுரிந்த மேலும் 2 பாகிஸ்தான் அதிகாரிகளும்தான் இந்த சதித் திட்டத்தை வகுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்கை தேடப்படுவோர் பட்டியலில் இணைத்து அவருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையறிந்த பாகிஸ்தான் அரசு சித்திக்கையும், மேலும் 2 பாகிஸ்தான் அதிகாரிகளையும் தனது நாட்டுக்கு திரும்ப வரவழைத்துக் கொண்டது.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், அமீர் சுபைல் சித்திக் அடுத்த மாதம் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆஜராக நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளதாக என்ஐஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.