திருச்சி: “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். முதல்வர் வேட்பாளரும் அவர் தான்.” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரயில் மூலம் நெல்லையிலிருந்து திருச்சி வந்தார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாஜக இந்தியா முழுவதும் 1200 எம்எல்ஏக்களையும், 330 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட கட்சி. பாஜக – அதிமுக பொருந்தா கூட்டணி என கூறுபவர்களுக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்?. ஒவ்வொருத்தர் குறித்தும் குறை கூற காரண காரியங்கள் வேண்டும்.
திமுக அரசு மக்கள் விரும்பாத அரசாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பழக்கம் அதிகரித்து இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் வீட்டுக்கு அனுப்பக்கூடிய அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது.
முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுg காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கூறுவது வதந்தி. தமிழ்நாட்டில் தான் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. ஜெகதீப் தன்கர் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். முதல்வர் வேட்பாளரும் அவர் தான்.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் இனி அடிக்கடி வருவார்.
தமிழகத்தில் திமுகவின் பி- டீமாக பலர் இருக்கிறார்கள். திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்பது மட்டும் நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதில் ஊடகத்தினர் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை. நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா எனும் கேள்விக்கு, “திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு எம்ஜிஆர் கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.