மதுரை: தமிழகத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைப்பதற்காக ‘தலைவர்கள் பூங்கா’ உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி மார்க்கெட் நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
அதில், “பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்கும் விவகாரத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் தலைவர்கள் பூங்கா அமைக்க தேவையான இடங்களை அடையாளம் காண வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளையும் தலைவர்கள் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைவர்கள் பூங்கா உருவாக்கும் போது அந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துகளை இளைஞர்களால் தெரிந்து கொள்ள முடியும். தலைவர்கள் பூங்காக்கள் அமைக்க உறுதியான முடிவெடுக்காமல் பொது இடங்களில் தலைவர்கள் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. பொது இடங்களில் சிலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். குடிமகன்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் மாநில அரசு பாதுகாக்க வேண்டும்.
ஏற்கெனவே பொது இடங்களில் சிலை அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பொது இடங்களில் சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த வழக்கில் சிலை அமைக்க அனுமதி வழங்கி பிறப்பித்த அரசாணையை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை 16-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர்.