கடலூர் / புதுச்சேரி: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனிசாமிக்கு, ரெட்டிச்சாவடியில் கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளர் எம்.சி.சம்பத்தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் தானே புயலின்போது நாங்கள் ஓடிவந்து நிவாரண உதவிகளை செய்தோம். கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விலைஇல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது, இவை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
ஸ்டாலின் கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வராக உள்ளார். வரி, கட்டணங்களை உயர்த்தி மக்களைப் பரிதவிக்கச் செய்துள்ளனர். குப்பைக்கு வரி போட்டது திமுக அரசுதான். சொன்னதைச் செய்யாமல், மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் விஞ்ஞான மூளைக்காரர்கள் திமுகவினர்.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். ஒரு திட்டத்தை ஸ்டாலின் அறிவிப்பார். அதற்கு குழு போடுவார். இதுவரை 52 திட்டங்களை அறிவித்து, 52 குழுக்கள் போட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் படத் தயாரிப்பு நிறுவனம், படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பல கோடி லாபத்துக்கு விற்பனை செய்கிறது.
டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி மேலிடத்துக்கு செல்கிறது. இதில் பெரிய ஊழல் நடக்கிறது. அமலாக்கத் துறை ரூ.1,000 கோடிக்கு ஊழலைக் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்துள்ளது. திமுகவினர் ஆட்டம் 8 மாதங்கள்தான் நீடிக்கும். தேர்தல் வருவதால்தான் ‘உங்களுடன் இருக்கிறேன்’ என ஸ்டாலின் நினைவுபடுத்துகிறார். நாலரை ஆண்டுகளாக அக்கறைஇல்லாமல், தற்போது வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். சேரவில்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடுவேன் என்று கூறி, மிரட்டுகின்றனர்.
இவ்வாறு பழனிசாமி கூறினார். தொடர்ந்து, நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம், பண்ருட்டி, நெய்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்’ என்று அமித்ஷா கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்’’ என்றார்.