சென்னை: தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை செப்.4-ம் தேதி கடந்து செல்லக்கூடும்.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.6-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி பாரன்ஹீட் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2-95 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 முதல் 82.4 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், ஆந்திரா, ஒரிஸா, மேற்கு வங்காள கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான், மத்தியமேற்கு, அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு பகுதிகள், கொங்கன், கோவா, கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், லட்சதீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், குஜராத் பகுதிகளில் செப்.3,4 தேதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு: தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 5 செமீ மழை பதிவானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.