மதுரை: தமிழகத்தில் கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்டுகளில் அறநிலையத் துறை பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரி செந்தில்குமார், பாண்டிதுரை, கனகராஜ், நாச்சியப்பன், ராம ரவிகுமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் பி.சுப்பாராஜ், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ராம.அருண்சுவாமிநாதன், ஜெயராம் சித்தார்த், ஏ.ஆர்.லக் ஷ்மணன், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் வாதிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் உபரி நிதியில் திருமணமண்டபம், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து அறநிலையத்துறை பட்ஜெட் நிதி மற்றும் கோயில் உபரி நிதியில் கோயில் வளாகம் மற்றும் பிற இடங்களில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட அறிவிப்பாணைகளை பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பாணைகள் வணிக நோக்கத்தில் பல்வேறு கட்டிடங்களை கட்டுவதன் மூலம் அறநிலையத் துறை வணிக நடவடிக்கையில் இறங்கியிருப்பதை காட்டுகிறது. கோயில் உபரி நிதியில் திருமணம் கட்டும் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளில் விரிவாக விவாதம் நடத்தப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள்தான் இந்த வழக்குகளிலும் எழுப்பப்பட்டுள்ளன.
இதனால் அவற்றின் உத்தரவு இந்த வழக்குகளுக்கும் பொருந்தும். அந்த உத்தரவின்படி, கோயில் நிதியை இந்து மத நிகழ்வுகள், கோயில் மேம்பாடு, பக்தர்களின் நலன் ஆகியவற்றுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். இதைக் கருத்தில் கொள்ளாமல் கோயில் நிதியில் வணிக ரீதியாக கட்டிடங்கள் கட்ட முடிவு செய்து அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது அறநிலையத் துறை சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி கோயில் நிதியில் திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பான அரசு மற்றும் அறநிலையத் துறையின் உத்தரவு மற்றும் அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.