கோவை: “தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடரும் நிலையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.” என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், ‘நலம்’ இலவச மருத்துவ முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். புலியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்ட முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், கண் நலம் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்து குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனுக்காக வாரந்தோறும் நலம் என்கிற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீதான குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் முதல்வர் சட்டப்பேரவையில் பேசும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசினார். சமீபத்தில் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் முதியவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலும் இதே போல் சம்பவம் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இதைப் பற்றி கவலைப்படாமல் திமுக, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களை தாங்களே திமுக-வினர் ஏமாற்றி வருகின்றனர்.
மத பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் பாஜக சார்பில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது.
கோவை மத பயங்கரவாதிகளின் தாக்குதலால் காவலர் செல்வகுமார், வீர கணேஷ், சசிகுமார் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மத பயங்கரவாதம் இல்லை என முதல்வர் கூறி வருகிறார். ஆனால் கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, மத பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது வேறு என்பதை சில அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கு தேவையான நீர் மற்றும் அவர்களுக்கான மானியத்தை வழங்கி தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்கள் மீது கடந்த 12 ஆண்டுகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்கள் பணம் மீண்டும் மக்களிடம் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைகோ இதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினர் விரும்பினால் பாஜ.க-வில் இணைந்து மக்கள் நல பணிகளுக்காக செயல்படலாம். தமிழகத்தில் திமுக அரசு நீட் குறித்து பொய்யான பிரச்சாரங்களை பரப்பிய போதும் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெறுபவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வை மக்களும் மாணவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறுவதற்கும், மருத்துவப் படிப்பு மேற்கொள்வதற்கும் நீட் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
பத்திரிகை சுதந்திர நாளில் வாழ்த்து தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, அவர்களது வீட்டில் சாக்கடையை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.