சென்னை: தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்டும் 15 புதியக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, 253 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதிதாக பணியமர்த்தப்படவில்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலையில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரையாளர்களாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.25 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் ஆண்டுக்கு 11 மாதச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் போன்றவற்றை பெற்றுள்ளதோடு, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியமும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, இவர்கள் அனைவரும் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இதற்கிடையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் 500 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்லூரிகளில் அவ்வப்போது முறையாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததும், நீண்ட காலமாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததும் கடும் கண்டனத்துக்குரியது. அரசு கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாணவ, மாணவியர் சேர்க்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 16,000 ஆக குறைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
எனவே, உயர் கல்வியை மேம்படுத்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்களை நியமிக்கவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.