வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு காலத்தில் நாம் தமிழகத்தில் இருந்து விரட்டப்படுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டியல் வெளியேற்றத்துக்காக பன்னெடு காலமாக போராடி வருகிறோம். இதை பழந்தமிழர் விடுதலையாக பார்க்க வேண்டும். அதிகாரம் எங்கள் கைக்கு வரும் போது இதை எல்லாம் நடைமுறைப் படுத்துவோம். தேவேந்திர குல வேளார்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தமிழக அரசுக்கு 3 கடிதம் அனுப்பி உள்ளது.
ஆனால் மாநில அரசுகள் இதை நிறைவேற்றுவதே இல்லை. வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர். திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை கொடுக்காதே என்று வடமாநில தொழிலாளர்கள் போராடும் நிலை உள்ளது.
தொழிலாளியாக வரும் வெளி மாநில தொழிலாளர்கள் படிப்படியாக முதலாளியாக மாறி வருகிறார்கள். மாநில அரசு தமிழர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து மது பழக்கத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.