சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் (செப். 4 மற்றும் 5) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப். 2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மழை பெய்துள்ளது. குறிப்பாக, வேலூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 6, 7-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவைக் கடந்து செல்லக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.