சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெறப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க உள்ளார்.
கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபயிற்சியின் போது தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் முதல்வர் இருந்து வருகிறார். இருப்பினும், அரசு மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தே மேற்கொண்டு வருகிறார். முதல்வரை, குடும்பத்தினர், அமைச்சர்கள், தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளார். முதல்வர் அவரை சந்திக்க இயலாத நிலையில், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் முதல்வரை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அதிகாரிகள் அளித்து அவரின் ஒப்புதலை பெற்றனர். இந்த சந்திப்பின் போது, கனிமொழிஎம்.பி.யும் உடன் இருந்தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு அளிக்க உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘மருத்துவமனையில் இருப்பதால் தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச்செயலர் மூலம் கொடுத்தனுப்பியுள்ளேன். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார்’’ என தெரிவித்துள்ளார்.
திமுகவினருடன் ஆலோசனை: இதனிடையே நேற்று சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக, மண்டல பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும்தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆ.ராசா எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதாகவும் அதற்கு காரணமான நிர்வாகிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.