வேலூர்: மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக கருதி கல்வி உள்ளிட்ட எல்லா நிதியையும் நிறுத்திவிட்டது. தமிழகம் இரண்டாம் தர மாநிலமாக சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள கட்சியாக திமுக இருக்கிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் குறித்து வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை-1) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பல்வேறு கோணங்களை உள்ளடக்கியுள்ளது.
பிரிந்து சென்றவர்கள், ஒத்த கருத்துடையவர்கள், நம் மீது விருப்பமுள்ளவர்கள் அனைவரையும் சந்தித்து திமுகவின் கொள்கைகளை விளக்கி இந்த அணியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதே இதன் முதல் நோக்கமாகும். தலைவரின் ஆணையை ஏற்று கட்சியின் பொதுச் செயலாளரான நான் உள்பட அனைவரும் ஒரு மாத காலத்துக்கும் மேலாக பணி செய்வோம்.
திமுக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, இது ஒரு சமுதாய போராளி கட்சி. தமிழகத்தின் இனம், மானம், மொழி, மரியாதை ஆகியவை அனைத்தையும் காக்கும் கட்சி. தமிழகம் இரண்டாம்தர மாநிலமாக சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள கட்சி. எனவே, மக்களை சந்திக்கும் போது திமுகவின் கோட்பாடுகளை மட்டும் கூறாமல் தமிழகத்தின் மொழி, மானம் காப்போம் என்பதையும் எடுத்துக்கூற கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம்தர குடிமக்களாக கருதி கல்வி உள்ளிட்ட எல்லா நிதியையும் நிறுத்திவிட்டனர். நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு ரூ.600 கோடி நிதி கோரியும் கொடுக்கவில்லை.
மேலும், மத்திய அரசுக்கு தமிழகம் மீது எந்தளவுக்கு வன்மம் உள்ளது என்பது கீழடி விவகாரத்தில் அறியமுடியும். அவர்கள் கீழடியை ஏற்கவில்லை, மொகஞ்சதாரோவையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்திய அரசு தற்போது இந்தியா குறித்து புதிய வரலாற்றை படைத்திட ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பிராமணர்கள். இதன்மூலம், வேறுவிதமான கலாச்சாரத்தை கட்டமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இவற்றை எல்லாம் ஓரணியில் இணைந்திருந்தால்தான் முறியடிக்க முடியும்.
இந்நிலையில், திமுக விளம்பர அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறார் என்றால், அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அப்படி கூறுகிறார். அவர் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் தொடங்கியுள்ள பிரச்சார இயக்கம் மூலம் அதிமுகவின் கொள்கையை கூறத்தான் செய்வார்.
அதேசமயம், எத்தனை எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது. பாமகவில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி தொடர்ந்து கூறி வருகிறார். அவரது தந்தை ராமதாஸ் அதை தவறு என மறுத்துவிட்டார். தமிழ்நாட்டில் பல திட்டங்களுக்கு நிதி கொடுத்துள்ளோம். சில இடங்களுக்கு கொடுக்கவில்லை. பல இடத்தில் நிலங்கள் சரியாக இல்லாததால் தாமதமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்காதது குறித்து விசாரிக்க சொல்லியுள்ளேன்.
மதத்தின் பெருமை சொல்லி மக்களை ஏமாற்றலாம் என பாஜக நினைக்கிறது. இந்த காரியத்தை எல்லாம், இதுபோல பல பெரிய காரியங்களை தமிழ்நாடு பார்த்துள்ளது. இது பெரியார் மண். இந்த தத்துவம் எல்லாம் எடுபடாது’’ என்றார். அப்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.