சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இது அவரது பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயல்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவருக்கும் நன்றி. அனைத்து கட்சி உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஒரு தமிழருக்கு கிடைக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். எனவே, கட்சி வித்தியாசங்களை தாண்டி, அனைத்து உறுப்பினர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: பொதுவாழ்க்கையில் எந்த காலத்திலும், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். மாநிலங்களவையை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும், அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து செல்லும் திறனும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் செயல்படுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்க கூடியவர். தான் வகித்த அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரை ஆதரிக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத்தலைவராகத் தேர்வாகி மக்கள் பணியைத் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.